
-அமிர்தநாயகம் நிக்ஷன் –
(சிரேஷ்ட ஊடகவியலாளர், அரசியல் ஆய்வாளர்)
*மதுரோவை அமெரிக்கா கைது செய்ய முடியுமானால், ஐநா எதற்கு?
*சர்வதேச சட்டங்கள் – நியமங்கள் எதற்கு?
*முள்ளிவாய்க்கால் போர் – நிபுணர்குழு அறிக்கையின் பிரகாரம் காசாவை பாதுகாக்கத் தவறிய ஐநா
*அமெரிக்கா – ரசியா திரைமறைவு ஒப்பந்தமா?
முள்ளிவாய்க்காலில் இறுதிப் போரில் பல உயிர்கள் துடிக்கத் துடிக்க கொல்லப்பட்டுக் கொண்டிருந்தபோது, ஐக்கிய நாடுகள் அமைதி காத்தது. ஆனால் கவலை வெளியிட்டது.
அத்துடன் ஏதோ ஒரு மனட்சாட்சியின் பிரகாரம், ஐநா பாதுகாப்புச் சபையை கூட்ட முற்பட்டபோது, அமெரிக்க – இந்திய அரசுகள் அதனைத் தடுத்தன.
2009 இல் போர் முடிவடைந்து, 2010 இல் ஐநா நியமித்த நிபுணர்குழு, முள்ளிவாய்காலில் பொதுமக்கள் கொல்லப்பட்ட போது, ஐநாவும் சர்வதேசமும் தடுக்கத் தவறியதாக அறிக்கையில், சுட்டிக்காட்டியிருந்தது.
அதேபோன்று, காசாவில் இஸ்ரேல் படுகொலைகளை செய்தபோதும், ஐநா அமைதி காத்தது. நிவாரண உதவிகளை மாத்திரம் அனுப்பியது. கவலை வெளியிட்டது. ஆனால் கண்டனம் தெரிவிக்கவில்லை.
ஆனால் ஹமாஸ் இயக்கம், இஸ்ரேல் மீது 2023 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 7 ஆம் திகதி நடத்திய தாக்குதலை ஐநா பலமாக கண்டித்திருந்தது.
ஆக, ஐக்கிய நாடுகள் சபை என்பது அமெரிக்க சார்புத் தன்மை கொண்டது அல்லது ஐநா என்றால் அமெரிக்கா, அமெரிக்கா என்றால் ஐநா என்ற ஒரு வரையறைதான்.
இப் பின்னணியில்–
வெனின்சுலா நாட்டின் ஜனாதிபதியை அமெரிக்கா , சர்வதசச் சட்டங்கள் – நியமங்களுக்கு மாறாக கைது செய்து, தமது நாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தியமை, ஏனைய சிறிய நாடுகளுக்குப் பாரிய அச்சுறுததல்..
அத்துடன், அரசு அற்ற ஏனைய தேசிய இனங்களுக்கும் பாரிய அச்சுறுத்தல்.

அதாவது —
ஒடுக்குமுறையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இலங்கை – இஸ்ரேல் போன்ற அரசுகள், தமது ஆட்சிக்கு உட்பட்ட தேசிய இனங்களை மேலும் ஒடுக்கவும், ’ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேசச் சட்டங்கள் போன்றவற்றை மீறி, தமது அரசு என்ற கட்டமைக்குள் அந்த தேசிய இனங்களை மேலும் அடக்கி ஆளவும் வழிவகுத்துள்ளது.
உதாரணமாக —
2012 ஆம் ஆண்டில் இருந்து, ஜெனீவா மனித உரிமைச் சபையின் தீர்மானங்கள் எதனையும் இலங்கை உரிய முறையில் நடைமுறைப்படுத்தவில்லை.
2024 ஆம் ஆண்டில் இருந்து சர்வதேச நீதிமன்றத்தின் எந்த ஒரு உத்தரவுகளையும் இஸ்ரேல் அமல்படுத்த விரும்பவில்லை. மாறாக காசா மீது தொடர்ந்து இன அழிப்பு போரை இஸ்ரேல் நடத்துகிறது.
ஆகவே —
இலங்கை – இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு. மேலும் ஒரு துணிச்சலை அமெரிக்கச் செயற்பாடு கொடுத்துள்ளது.
குறிப்பாக —
அமெரிக்கா, இன்னுமொரு இறைமை உள்ள நாடு ஒன்றுக்குள் பலாத்காரமாக புகுந்து, அந்த நாட்டின் ஜனாதிபதியை கைது செய்து, தமது நீதிமன்றத்தில் முன்நிலைப்படுத்த முடியுமென்றால்—
1) ஐக்கிய நாடுகள் சபை எதற்கு?
2) சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் எதற்கு?
3) சர்வதேச நீதிமன்றம் எதற்கு?
4) ஜெனீவா மனித உரிமைச் சபை எதற்கு?
5) சர்வதேசச் சட்டங்கள் – நியமங்கள் எதற்கு?
ஏனைய நாடுகளின் ஜனாதிபதிகள் – பிரதமர்கள் மீது அமெரிக்கா குற்றம் சுமத்தித் தீர்ப்பும் சொல்ல முடியும் என்றால்–
A) அமெரிக்கா என்ன சர்வதேச நீதிமன்றமா?
B) டொனால்ட் ட்ரம்ப் அதன் தலைமை நீதிபதியா?
இவை எல்லாமே சாதாரண மக்களிடம் இருந்து எழும் கேள்விகள் தான்…
ஆனால் நடக்கப் போவது என்ன?
வெனின்சுலா அரசுக்கு ரசிய – சீனா ஆகிய நாடுகள் பெரும் தொகை கடன்களை வழங்கியிருக்கின்றன.
ஆனால் அக் கடன்களை, வெனிசுலாவில் அமெரிக்கா உருவாக்கவுள்ள புதிய அரசாங்கம் திருப்பிச் செலுத்த வாய்ப்பில்லை.
வெனிசுலாவில் உள்ள எண்ணெய் வளங்களை, உலகின் ஏனைய நாடுகளுக்கு மிகக் குறைந்த விலையில், அமெரிக்கா வழங்கினால், உலகில் ரசிய எண்ணெய் வர்த்தகம் சரிவடையும்…
ரசியாவிடம் இருந்து எண்ணெய்யை கொள்வனவு செய்ய வேண்டாம் என்று கடந்த ஒரு வருடமாக மோடிக்கு ட்ரம்ப் கடும் அழுத்தம் கொடுத்து வருகிறார்.
ஆகவே, குறைந்த விலையில் வெனிசுலா எண்ணெய்யை இந்தியாவுக்கு ட்ரம்ப் வழங்கினால், ரசிய – இந்திய உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்புண்டு.
ஆகவே, 2026 இல் உலகில் பல குழப்பங்களை டெனால்ட் ட்ரம்ப் உருவாக்கியுள்ளார்.
போதைப் பொருள் கடத்தல் போன்ற பல குற்றச்சாட்டுக்களை அமெரிக்கா, வெனிசுலா ஜனதிபதி மீது சுமத்தலாம். அக் குற்றங்கள் உண்மையாகவும் இருக்கலாம்.
ஆனால், அந்த நாட்டுக்குள் புகுந்து ஜனாதிபதியை கைது செய்ய அமெரிக்காவுக்கு எந்த ஓர் அதிகாரமும் இல்லை.
அமெரிக்காவும் ஒரு நாடு வெனிசுலாவும் ஒரு நாடு…வேண்டுமானால் வெனிசுலாவுடன் போரை நடத்தியிருக்கலாம்.
ஐநா என்ற வரையறைக்குள் சிறிய – பெரிய நாடுகள் என்ற வேறுபாடுகள் இல்லை.
ஆகவே, சர்வதேச நியமங்களை மீறிய குற்றச்சாட்டை அமெரிக்கா மீது உலக நாடுகள் முன்வைக்க வேண்டும்.

சதாம் உசேன் – கடாபி ஆகியோருக்கு நடந்தது என்ன? ஏன் உலகம் இதுவரை அது பற்றி மீள் பரிசிலனை செய்ய மறுக்கிறது?
ஆக, புவிசார் அரசியல் – பொருளாதார நலன் என்ற ஒன்றைத் தவிர, உண்மையான மனிதாபிமானம் – அரசியல் அறம் என்பதல்லாம் வெறும் பேச்சுக்கள் மாத்திரமே…
அறம் – மனித உரிமை என்று மார்தட்டுகின்ற சர்வதே அரச சார்பற்ற நிறுவனங்களின் பின்னாலும், அரசியல் நிகழ்ச்சி நிரல் உண்டு.
இப் பின்புலத்தில், சிறிய நாடுகளுக்கும் அரசு அற்ற தேசிய இனங்களுக்கும் இனிமேல் பாதுகாப்பு இல்லை என்பது உறுதி.
அதேநேரம் —
சீன – ரசியா என்ற வல்லரசுகளிடமும் கள்ளத் தனம் உண்டு. புவிசார் அரசியல் நோக்கில், அமெரிக்கா என்ற வல்லரசுடன் திரைமறைவில் காய் நகர்த்தல்களும் இல்லாமலில்லை.
ஒரு சந்தேகம்–
வெனிசுலா விவகாரத்தில், அமெரிக்க – ரசிய திரைமறைவு உடன்பாடு இருக்க வாய்ப்பு உண்டு.
அதாவது “உக்ரெய்ன் உனக்கு, வெனிசுலா எனக்கு” என ட்ரம்ப் – புட்டின் இருவரும் இரகசிய ஒப்பந்தம் செய்திருக்கலாம்.
இது உண்மையாக இருந்தால், இதுவரை காலமும் இந்தியா பின்பற்றிய இரட்டை சர்வதேச கொள்கை அதாவது, அமெரிக்காவுடனும் ரசியாவுடனும் இந்தியா சமாந்தரமாக கையாண்டு வந்த வெளியுறவு கொள்கை, இந்தியாவுக்கு வெற்றி எனலாம்.

இங்கேதான், இலங்கைக்கு பலத்த அரசியல் வெற்றி உண்டு. அது அநுர இருந்தால் என்ன, சஜித் – ரணில் ஜனாதிபதியாக இருந்தால் என்ன? இலங்கைக்கு இது சாதகமானதே!
ஆனால், புவிசார் அரசியல் ஓட்டங்களை மதிப்பீடு செய்து அணுகும் பக்குவம் தமிழ்த்தரப்பிடம் இல்லை.
வெறும் பார்வையாளர்களாகவும் தேர்தல் அரசியல் கட்சிகளகவும் இருப்பதிலேயே அவர்கள் பழக்கப்பட்டு விட்டனர் .




