
மண்டைதீவு புதைகுழி வழக்கின் அறிக்கையை அச்சுப் பிரதியாக ஊர்காவற்றுறை நீதிமன்றில், யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் நேற்று(17) சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் வழக்கு அடுத்த வருடம் மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.
ஊர்காவற்றுறை நீதிமன்றில், குறித்த வழக்கு நேற்று முன்தினம் (16) எடுத்துக்கொள்ளப்பட்டபோது
அறிக்கையை தட்டச்சு வடிவில் பிரதியாக்கம் செய்து (17) சமர்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து அச்சுப் பிரதியாக்கம் செய்யப்பட்ட அறிக்கையை யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார், மீண்டும் நீதிமன்றில் சமர்பித்திருந்தனர்.
இதையடுத்து அறிக்கையின் விவரங்கள், சாட்சிகள் உள்ளிட்டவற்றை பெற்றுக்கொண்ட நீதவான் மேலதிக சாட்சிகளின் வாக்குமூலங்களை குற்றத்தடுப்பு பிரிவினர் பெறவேண்டும் என்ற கோரிக்கையாலும், அகழ்வுக்கான பணிகளை முன்னெடுக்கும் புறச்சூழல் தற்போது இல்லாததாலும், அவ்வாறான காரணிகளை கருத்தில் கொண்டு குறித்த வழக்கை எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதிக்கு தவணையிட்டார்.



