வாகன இறக்குமதிக்கு புதிய கட்டுப்பாடு: அமைச்சரவை அதிரடி முடிவு!

இறக்குமதி செய்யப்படும் மோட்டார் வாகனங்கள் மீது தற்காலிகமாக விதிக்கப்பட்டுள்ள 50 சதவீத மேலதிக சுங்க இறக்குமதி வரி தொடர்பான கட்டளைகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மத்திய கிழக்கு ஆயுத மோதல்கள் காரணமாக இறக்குமதிச் செலவுகள் அதிகரித்துள்ளதாலும், அது தேசிய பொருளாதாரத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களைக் கருத்திற்கொண்டும் இந்த மேலதிக வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மே மாதம் 16ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த மேலதிக வரி விதிப்பு, மூன்று மாத காலத்திற்கு அமலில் இருக்கும்.

அத்துடன், மே 16ஆம் திகதிக்கு பின்னர் வாகன இறக்குமதிக்காக திறக்கப்படும் கடன் கடிதங்களுக்கு (LC) மாத்திரமே இது பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த நடவடிக்கை மூலம் வாகன இறக்குமதிகள் கட்டுப்படுத்தப்பட மாட்டாது என அமைச்சரவைப் பத்திரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேநேரம், மே மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் திறக்கப்பட்ட தற்போதைய கடன் கடிதங்களில் வாகனங்களின் எண்ணிக்கை, வாகன அடையாள எண்கள்,விபரங்கள் அல்லது தொழில்நுட்ப விவரக்குறிப்புகள் போன்றவற்றில் மே 15ஆம் திகதிக்கு பின்னர் ஏதேனும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தால்,

அந்த இறக்குமதிகளுக்கும் இந்த மேலதிக வரி விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று மாத காலப்பகுதியில் வாகன இறக்குமதிகளை முறைப்படுத்துவதையும், ஏற்கனவே இலங்கைக்குள் இறக்குமதி செய்யப்பட்டுள்ள வாகனங்களின் விலைகளில் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாமல் உறுதிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு குறிப்பிட்டுள்ளது.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version