40 நாடுகளுக்கு இலவச வீசா : இன்று முதல் நடைமுறையில்!

40 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்வதற்கான இலவச வீசா வழங்கும் நடைமுறை இன்றுமுதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 30 ஆம் திகதி இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியிருந்தது.

அந்த அனுமதிக்கு அமைய, குடிவரவு விதிமுறைகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியிருந்தது.

இந்நிலையில், இந்த புதிய திட்டத்தின் கீழ், தகுதியுள்ள வெளிநாட்டு பிரஜைகள், இரட்டை நுழைவு அனுமதியுடன் 30 நாட்களுக்குச் செல்லுபடியாகும், ETA எனப்படும் இலவச இலத்திரனியல் பயண அங்கீகாரத்தை பெற முடியும் என குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஐ. சமிந்த பத்திராஜா தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, அவுஸ்திரேலியா, ஆஸ்திரியா, பஹ்ரைன், பெலாரஸ், ​​பெல்ஜியம், கனடா, சீனா, செக் குடியரசு, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மன், இந்தியா, இந்தோனேசியா, ஈரான், இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான், கஜகஸ்தான், குவைத், மலேசியா, நேபாளம், நெதர்லாந்து, நியூசிலாந்து, நோர்வே, ஓமான், பாகிஸ்தான்,

போலந்து, கத்தார், ரஷ்யா, சவுதி அரேபியா, தென் கொரியா, ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, தாய்லாந்து, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் பிரஜைகளுக்கே இந்த விசேட திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மாலைத்தீவுகள், சீஷல்ஸ் மற்றும் சிங்கப்பூர் நாட்டினர் ETA செயலாக்கத்தை தொடர்ந்து கட்டணமின்றி பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப 30 நாள் காலத்திற்குப் பிறகும் இலங்கையில் தங்கியிருக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், அதற்கான கட்டணத்தைச் செலுத்தி விசா நீட்டிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version