இலங்கைவடக்கு மாகாணம்

வடக்கில் சிதைவடைந்த வீதிகளை புனரமைக்க வடக்கு மாகாண சபைக்கு நிதி வழங்கத் தயார் – ஜனாதிபதி!

பேரிடர் காரணமாக வடக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட உள்ளூர் வீதிகளைத் புனரமைப்பதற்குத் தேவையான நிதியை வடக்கு மாகாண சபைக்கு வழங்குவதற்கு அரசாங்கம் தயாராக உள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட செயலகத்தில் இன்று(13) மாலை இடம்பெற்ற விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

அங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி, “அத்தியாவசியத் தேவையாகக் காணப்படும் கிராமிய வீதிகளைப் புனரமைப்பதே எமது தற்போதைய முக்கிய இலக்காகும்.

பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்கான முதற்கட்ட உதவிகளை நீங்கள் வழங்கியுள்ளீர்கள். தற்போது அவர்களின் வாழ்வாதாரத் துறைகளான விவசாயம், மீன்பிடி மற்றும் கால்நடை வளர்ப்பு ஆகியவற்றைக் கட்டியெழுப்புவதிலும், உட்கட்டுமானங்களை மீளமைப்பதிலும் எமது முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டும்.

எமது கடல் வளத்தைப் பாதுகாக்கக் கடற்படை நடவடிக்கை எடுத்து வரும் அதேவேளை, இது இராஜதந்திர ரீதியிலும் கையாளப்பட வேண்டும்.

வடக்கு மீனவர்களின் உரிமைகளை இழப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்” – என்றார்.

இந்த கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், பிரதியமைச்சரும் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான உபாலி சமரசிங்க, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்,


வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன், து.ரவிகரன், ப.சத்தியலிங்கம், செல்வம் அடைக்கலநாதன், ரிசாட் பதியுதீன், காதர் மஸ்தான், பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சுக்களின் செயலாளர்கள், வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button