வவுனியா மாநகரசபையின் முன்னாள் முதல்வர் எஸ். காண்டீபன் உள்ளிட்ட நால்வரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

வவுனியா மாநகரசபையின் முன்னாள் முதல்வர் எஸ். காண்டீபன் உள்ளிட்ட நான்கு பேரைக் கைது செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

வவுனியா மாநகரசபையின் செங்கோல், பதக்கம் மற்றும் முதல்வர் ஆடை என்பன காணாமல் போயுள்ளதாகச் சபையின் செயலாளரால் நேற்றுமுன்தினம் (30) வவுனியா தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த முறைப்பாட்டுக்கு அமைய, CCTV காட்சிகளின் உதவியுடன் வவுனியா தலைமையக பொலிஸ் அதிகாரிகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இந்த விசாரணைகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கை, பொலிஸாரால் நேற்று(01) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை பரிசீலித்த நீதவான், பொலிஸாரின் கோரிக்கைக்கு அமையச் சந்தேகநபர்களைக் கைது செய்ய உத்தரவிட்டார்.

இதன்படி, முன்னாள் முதல்வர் எஸ். காண்டீபன் உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக வவுனியா தலைமையக பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

Swing Ad
Tamil World Radio Ad
↑
Exit mobile version