சிறுமி வைஷாலியின் கை அகற்றப்பட்ட வழக்கில், பொலிஸார் அசமந்தபோக்கைக் கண்டித்த யாழ். நீதிமன்றம்!

சிறுமி வைஷாலியின் கை அகற்றப்பட்ட வழக்கில், காலத்தை இழுத்தடித்து, நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்கும் பொலிஸாரின் போக்கைக் கண்டித்த நீதிமன்றம், குறுகிய காலத்தில் இறுதி அறிக்கையை வழங்க வேண்டும் என்றும் பொலிஸாருக்குக் கட்டளையிட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் சாண்டில்யன் வைஷாலி என்ற சிறுமி காய்ச்சல் மற்றும் தோலில் ஏற்பட்ட தொற்றுக் காரணமாக யாழ். போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு மணிக்கட்டில் ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்டது. ஓரிரு நாள்களில் மணிக்கட்டு வீக்கமடைந்து பின்னர் அந்தப் பகுதி வெட்டி அகற்றப்பட்டது.
இந்த விடயத்தில் மருத்துவத் தவறு நேர்ந்துள்ளதாக சிறுமியின் பெற்றோர் குற்றஞ்சாட்டுயதோடு, பல்வேறு தரப்பினரிடம் தமக்கான நீதியையும் கோரியிருந்தனர்.
அதற்கமைய, இந்த வழக்கு யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றில், மேலதிக நீதவான் நஜ்மி ஹுசைன் முன்னிலையில் நேற்று(03) விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கின் கடந்த தவணையில், “வழக்குத் தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கையொன்றை சட்டமா அதிபருக்கு அனுப்பிவைத்துள்ளோம்.
எனவே அவரின் ஆலோசனையைப் பெறுவதற்கான நீண்ட கால அவகாசத்தை நீதிமன்றம் வழங்கவேண்டும்” என பொலிஸார் நீதிமன்றில் கோரியிருந்தனர்.
ஏற்கனவே இந்த வழக்கு இரண்டு வருடங்கள் கடந்து விட்டதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, நீண்ட தவணையை வழங்க மறுத்து, சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறுவதற்கான கால அவகாசத்தின் பொருட்டு நேற்றுவரை வழக்கை தவணையிட்டிருந்தார்.
நேற்று வழக்கு நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, வழக்குத் தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கை இதுவரை சட்டமா அதிபருக்கு அனுப்பப்படவில்லை என்றும், கொழும்பிலுள்ள பொலிஸ் சட்டக்கல்லூரி ஊடாக இனிமேல்தான் சட்டமா அதிபருக்கு விசாரணை அறிக்கை அனுப்பப்படவுள்ளது என்றும் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி சார்பாக மன்றில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி எஸ்.கே.புரந்தரன், மன்றைப் பொலிஸார் தவறாக வழிநடத்துகின்றனர் என்றும், வழக்கை காலந்தாழ்த்திக் கொண்டு செல்வதற்கு நீதிமன்றம் அனுமதிக்கக் கூடாது என்றும் கோரினார்.
கடந்த வழக்குத் தவணையில் முழுமையான விசாரணை அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று கூறி நீண்ட தவணை கோரிய பொலிஸார், தற்போது விசாரணை அறிக்கை இன்னமும் அனுப்பப்படவில்லை என்று குறிப்பிடுவதையும் சுட்டிக்காட்டினார்.
சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறுவதற்கு நீதிமன்றம் ஒரு கால எல்லையைப் பொலிஸாருக்கு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை முன்வைத்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதவான், இந்த வழக்கில் பொலிஸாரின் போக்கைக் கடுமையாகக் கண்டித்தார். இந்த வழக்கின் ஆரம்பத்தில் இருந்து மாறுபட்ட தகவல்களையே தெரிவித்து வருகின்றனர்.
வழக்குத் தொடுநர் தரப்பான பொலிஸ் தரப்பில் இருந்து ஒவ்வொரு வழக்குத் தவணையின்போதும் மேலதிக அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
பொலிஸாரின் செயற்பாடுகள் காலத்தை இழுத்தடிப்புச் செய்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்குவதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்கு குந்தகம் விளைவிப்பனவாகவும் அமைகின்றன.
இறுதி விசாரணை அறிக்கையை யாழ்ப்பாணம் பொலிஸ் தலைமையகம் குறுகிய காலத்தில், இல்லாவிட்டால் அடுத்த தவணையில் வழங்க வேண்டும். நீதிமன்ற வழக்குக் குறிப்பேடுகளை வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கும், பொலிஸ்மா அதிபருக்கும் அனுப்பவேண்டும் என்று நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.




