NewsPoliticsSri LankaWorld

‘இன்று இந்தியப் பிரதமர், இலங்கைக்கு வருவது, தனக்கு பெருமை என சொல்வதை விட, இலங்கையில் யாழ்ப்பாணத்துக்கு வருவது பெருமை என்று சொல்லியிருப்பது இந்த மாற்றத்தைக் காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.

இன்னும் சில நாள்களில் தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இலங்கைத் தமிழர்கள் இந்தத் தேர்தல் குறித்து என்ன கருதுகிறார்கள் என்று ஆராய்ந்தது பிபிசி தமிழ்.

இலங்கை தமிழர் தொடர்பிலான பிரச்னை இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் செல்வாக்கு செலுத்திவந்த நிலையில் அது தற்போது இந்தியாவின் வட பகுதி வரை ஆக்கிரமித்துள்ளதாக இலங்கையின் அரசியல் விமர்சகரான கலாநிதி ஜனகன் விநாயகமூர்த்தி தெரிவிக்கிறார்.

பிபிசி தமிழுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

‘இன்று இந்தியப் பிரதமர், இலங்கைக்கு வருவது, தனக்கு பெருமை என சொல்வதை விட, இலங்கையில் யாழ்ப்பாணத்துக்கு வருவது பெருமை என்று சொல்லியிருப்பது இந்த மாற்றத்தைக் காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.

இலங்கை தொடர்பிலான பிரச்சினைகளை, தமிழக முன்னாள் தலைவர்கள், தேர்தல் காலப் பகுதியில் அடுக்கு மொழிகளில் பேசுவது வழக்கமாக வைத்திருந்ததாகவும் அவர் கூறுகின்றார்.

அதேபோன்று, இன்றைய தலைவர்களாக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி மற்றும் ஸ்டாலின் போன்றவர்களும் ஈழத் தமிழர் பிரச்சினைகளை, தேர்தல் மேடைகளில் பேசி வருவதாக அவர் தெரிவிக்கிறார்.

தமிழகத்தில் அகதிகளாக இருக்கக்கூடிய ஈழத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமையை பெற்றுக்கொடுப்பது, இந்த முறை தமிழக தேர்தல் களத்தில் முக்கிய கருப் பொருளாக மாறியுள்ளது எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இந்தியா, இலங்கையில் தங்களுடைய நல்லிணக்கத்தை கொண்டு வர வேண்டும் என்றால், வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பகுதிகளில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு தங்களுடைய ஆதரவு இருக்கு என்பதை ஆணித்தனமாக சொல்ல வேண்டிய தேவைப்பாடு புவியியல் ரீதியாகவும், பூகோள ரீதியாகவும் தற்போது ஏற்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.

தமிழகத்தில் இருந்த திராவிட கட்சிகள் மாத்திரமன்றி, இன்று போட்டியிடுகின்ற மக்கள் நீதி மய்யம் கூட, ஈழத் தமிழர் பிரச்சினையில் அதிக அக்கறை கொடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு மாற்றப்பட்டிருக்கின்றது என அவர் கூறுகின்றார்.

இலங்கை தமிழ் ஊடகவியலாளரின் பார்வை

தமிழக சட்டமன்றத் தேர்தல் தொடர்பில் இலங்கையின் மூத்த ஊடகவியலாளரும், தமிழன் பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான ஆர்.சிவராஜாவிடம் பிபிசி தமிழ் வினவியது.

இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பில் கடந்த 10 வருட காலமாக தமிழகத்திலிருந்து பெரிதாக குரல் எழுப்பப்படவில்லை என மூத்த ஊடகவியலாளர் ஆர்.சிவராஜா தெரிவிக்கிறார்.

இவ்வாறான நிலையில், இந்த முறை சட்டமன்றத் தேர்தலில் மாற்றமொன்று ஏற்பட்டு, அதனூடாக இலங்கை தமிழர் பிரச்சினையில் புதியதொரு மாற்றம் ஏற்படலாம் என அவர் கூறுகிறார்.

இலங்கை தமிழர் பிரச்சினையில் தி.மு.க கடந்த காலங்களில் சட்ட சபையில் தீர்மானங்களை நிறைவேற்றியிருந்ததாக கூறும் அவர், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அவ்வாறான திட்டகாத்திரமான தீர்மானங்களை எடுத்ததாக தெரியவில்லை என குறிப்பிடுகிறார்.

இலங்கை பிரச்சினையில் தற்போது ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இவ்வாறான நிலையில், தி.மு.க ஆட்சிக்கு வந்தால், ஜெனீவா தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக ஸ்டாலின் கடுமையான நெருக்கடிகளை கொடுப்பார் என மூத்த ஊடகவியலாளர் ஆர்.சிவராஜா தெரிவிக்கிறார்.

அதேபோன்று, மீனவப் பிரச்சினையிலும் மத்திய அரசு, இலங்கையுடன் நட்புறவு அடிப்படையில் தீர்வுகளை எடுத்து வருவதாக அவர் கூறுகின்றார்.

இந்த பின்னணியில், மீனவப் பிரச்சினையிலும், ஸ்டாலினின் அழுத்தம் மிக கடுமையாக இருக்கும் என அவர் குறிப்பிடுகிறார்.

அதேபோல, இலங்கை தமிழர் பிரச்சினையில் அரசியல் தீர்வு வர வேண்டும் என்பதை ஸ்டாலின் வலியுறுத்துவார் என அவர் தெரிவிக்கிறார்.

இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து, ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோர் தொடர்ச்சியாக ஏதோ வகையில் மத்திய அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுத்த வண்ணமே இருந்ததாக கூறும் அவர், தற்போதைய தலைவர்கள் அவ்வாறான அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை என குறிப்பிடுகிறார்.

ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோர் போன்று, இலங்கை தமிழர் தொடர்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெரிய அளவிலான நெருக்குதல்களை கொடுக்கவில்லை என அவர் கூறுகின்றார்.

எனினும், ஸ்டாலின் இலங்கை தமிழர் பிரச்சினையில் சற்று முன்னோக்கிய நகர்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் மூத்த ஊடகவியலாளர் ஆர்.சிவராஜா தெரிவிக்கிறார்.

தமிழக சட்ட மன்றத் தேர்தல் தொடர்பில் இலங்கை வாழ் தமிழ் மக்களின் கருத்துக்களையும் கேட்டோம்.

தற்போது இலங்கை தொடர்பில் பேசுபவர்கள், ஆட்சிக்கு வந்ததன் பின்னர், உறுதி மொழிகளை நிறைவேற்றுவார்களா என்ற கேள்வியை மனதில் எழுகின்றது என கொழும்பு – வெள்ளவத்தை பகுதியைச் சேர்ந்த பிரேம் தெரிவிக்கிறார்.

எங்களுடைய கைகளை நாங்களே நம்பி இருக்க வேண்டிய நிலைமையே காணப்படுகிறது எனவும் அவர் கூறுகின்றார்.

தனக்கு அரசியல்வாதிகளின் கருத்துக்கள் மீது நம்பிக்கை கிடையாது எனவும் அவர் குறிப்பிடுகிறார்.

இதேவேளை, மற்றுமொரு தமிழரும் இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்தார்.

புஷ்பநாதன்
படக்குறிப்பு,புஷ்பநாதன்

இலங்கை தமிழர் பிரச்சினைக்கு இலங்கை அரசியல்வாதிகளினாலேயே தீர்வை பெற்றுக்கொடுக்க முடியவில்லை என்ற நிலையில், இந்திய அரசியல்வாதிகளினால் அதனை எவ்வாறு தீர்க்க முடியும் என அவர் கேட்கிறார்.

ஜெயலலிதா, கருணாநிதி கூறிய விடயங்களையே, இன்று வரை கூறி வருவதாகவும், ஆனால் தீர்வுகள் இதுவரை கிடைக்கவில்லை எனவும் மலையகத்தைச் சேர்ந்த புஷ்பநாதன் தெரிவிக்கிறார்.

சதிஷ்
படக்குறிப்பு,சதிஷ்

தேர்தல் காலப் பகுதியிலாவது, இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து பேசுவது வரவேற்கத்தக்கது என கிளிநொச்சியைச் சேர்ந்த சதிஷ் தெரிவிக்கிறார்.

இந்தியாவில் வழங்கப்படும் வாக்குறுதிகள் இலங்கையில் தாக்கத்தை செலுத்தாது என்ற போதிலும், இந்திய அரசியலில் மாத்திரமே அது தாக்கத்தை செலுத்தி வருவதாகவும் கூறுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button