இலங்கை
Trending

‘பொன் அணிகளின் போர்’ – சமநிலையில் நிறைவு!

பொன் அணிகளின் போர்’ என வர்ணிக்கப்படும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும், யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரிக்கும் இடையிலான 109ஆவது பெருஞ்சமர் சமநிலையில் நிறைவடைந்தது.

இந்த துடுப்பாட்டப் போட்டி வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் கடந்த 12-ஆம் திகதி ஆரம்பமானது.

போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற, புனித பத்திரிசியார் கல்லூரி அணி, முதலில் களத்தடுப்பைத் தெரிவு செய்தது.

அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணி, தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 176 ஓட்டங்களைப் பெற்றது.

அதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸூக்காக துடுப்பெடுத்தாடிய புனித பத்திரிசியார் கல்லூரி அணி, முதல் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 40 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இரண்டாம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த புனித பத்திரிசியார் கல்லூரி அணி, தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 225 ஓட்டங்களைப் பெற்றது.

பின்னர் 49 ஓட்டங்கள் பின்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த யாழ்ப்பாணக் கல்லூரி அணி, இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 99 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

மூன்றாம் நாள் ஆட்டத்தில் நேற்று (14), தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த யாழ்ப்பாணக் கல்லூரி அணி, 9 விக்கெட்டுகளை இழந்து 246 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

தொடர்ந்து 198 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த புனித பத்திரிசியார் கல்லூரி அணி, ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 106 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இதனால் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணியின் எஸ்.கே. ஹமிஸ் ஹர்மிஷன் ஆட்டநாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார்.

இதுவரை நடைபெற்ற 109 போட்டிகளில் புனித பத்திரிசியார் கல்லூரி 35 தடவைகளும், யாழ்ப்பாணக் கல்லூரி 17 தடவைகளும் வெற்றி பெற்றுள்ளன.

ஏனைய 32 போட்டிகள் சமநிலையில் முடிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button