
எதிர்வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரை ஜூலை 7ஆம் திகதி முதல் ஜூலை 10ஆம் திகதி வரை நடத்துவதற்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய புதன்கிழமை தவிர்ந்த ஏனைய அமர்வு நாட்களில் முற்பகல் 10:00 மணி முதல் 11:30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்கள் மற்றும் நிலையியற் கட்டளை வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், புதன்கிழமை பிரதமரிடமிருந்தான வினாக்களுக்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த வாரத்தில், தொல்பொருட்கள் கட்டளைச்சட்டம் மற்றும் ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழான விதிகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
கொடுப்பனவுகள் மற்றும் தீர்வு முறைகள் சட்டம், மோட்டார் வாகன ஒழுங்குவிதிகள் மீதான விவாதம், புலம்பெயர் தொழிலாளர்களின் சவால்கள் குறித்த எதிர்க்கட்சியின் ஒத்திவைப்பு வேளை விவாதம் ஆகியனவும்,
சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுத்தல் தொடர்பான மூன்று முக்கிய சட்டமூலங்களின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதமும் நடத்தப்படவுள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான உரிமம், பாரம்பரிய தளங்களின் பாதுகாப்பு, பாடசாலைகளில் ஆரோக்கியமற்ற உணவு விற்பனைத் தடை மற்றும் யாழ்ப்பாண அபிவிருத்தி உள்ளிட்ட தனிப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிரேரணைகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.




