BatticaloaJaffnaKilinochiMothurNewsPoliticsSri LankaTrincoWorld
Trending

தமிழர் தாயகத்தின் தன்னெழுச்சியான P2P கவனயீர்ப்பு போராட்டம் 2009 இற்கு பின்னான ஓர் திருப்புமுனையாகும்!!!

தமிழர் தாயகத்தின் தன்னெழுச்சியான P2P கவனயீர்ப்பு  போராட்டம் 2009 இற்கு பின்னான ஓர் திருப்புமுனையாகும்!!!
தமிழீழத்தில் சமகாலத்தில் கடுகதியாக திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டுவரும் தமிழின அழிப்பிற்கு எதிராக தமிழீழத்தின் வடக்கும் கிழக்கும் ஓரணியில் திரண்டு, இலட்சிய வேட்கை மேலோங்க, பேதங்கள் புதையுற தன்னெழுச்சிகொண்டு முன்னெடுக்கும் போராட்டத்தை தமிழர் இயக்கம் வரவேற்கின்றது.
அனைத்துலக அரங்கில் தொடர்ச்சியாக உறுதி தளராது போராடுவதற்கான உத்வேகத்தையும் இப்போராட்டம் வழங்கியுள்ளது. தமிழீழத்தில் இடம்பெற்றது, இடம்பெற்றுக்கொண்டிருப்பது திட்டமிட்ட தமிழின அழிப்பு என்ற கருத்தியலை சமரசமற்று முன்னெடுத்துவரும் தமிழர் இயக்கம் எமது எதிரிகளால் பல சவால்களை எதிர்கொண்டுள்ளது. பல சந்தர்ப்பங்களில் எமது நிலைப்பாடு தாயக மக்களின் நிலைப்பாடு அல்ல என்று பெரும்பாண்மை அனைத்துலக சமூகத்தாலும், ஏன் சில தமிழ் தரப்புக்களினாலும் ஓரம்கட்டபட்ட வரலாறும் இடம்பெற்றது.
ஆனால் அவற்றை எல்லாம் பொய்ப்பித்து இடம்பெற்றது தமிழின அழிப்பு என்று தாயகம் வானதிர இடித்துரைக்கும் பிரகடனமாக இப்போராட்டம் திகழ்வதுடன், தாயக மக்களின் ஆழ்மன விருப்புடன், அவர்களும் நாமும் ஓர் கோரிக்கையில் ஓர் தாய் பிள்ளைகளாக பயணிக்கின்றோம் என்ற ஒரு செய்தியை இப்போராட்டம் உலகிற்கு கட்டியம் கூறி நிற்கின்றது. வெடித்த நிலத்தில், அழித்த நிலத்தில் இனி ஏதும் முளைக்காது என பகல்கனவு கண்ட பலரின் எண்ணங்களில் “ போராட்டம் நீள்கிறது” என்ற வரலாற்றுச் செய்தியை பறைசாற்றியுள்ளது.
இப்போராட்டத்தின் நோக்கம் மற்றும் கோரிக்கைகளை தமிழர் இயக்கம் பன்மொழிகளில் அனைத்துலக சமூகத்திற்கு அனுப்பிவைத்துள்ளதுடன் போராட்டத்தினை நிறுத்தும், அடக்கும் வகையில் சிறீலங்கா அரச பயங்கரவாதத்தினால் தொடர்ச்சியாக ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தல்கள் தொடர்பாகவும் ஐ.நா வின் பிரதிநிதிகள், உறுப்பு நாடுகள் உற்பட பன்னாட்டு இராசதந்திர மட்டங்களிற்கும் தொடர்ச்சியாக அறிக்கைகளை அனுப்புவதன் ஊடாக தெரியப்படுத்தியவாறே இருக்கின்றோம்.
ஓர் திருப்புமுனையாக அமையும் இப்போராட்டத்தில் தாயக உறவுகள் பெருந்திரட்சிகொள்ளுமாறு வேண்டுவதுடன் உலகத்தமிழர்களும் தமது தார்மீக ஆதரவை வழங்குமாறு அன்புரிமையுடன் வேண்டுகின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button