- Knowledge is power
- The Future Of Possible
- Hibs and Ross County fans on final
- Tip of the day: That man again
- Hibs and Ross County fans on final
- Spieth in danger of missing cut
20 நவம்பர் 2020
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை விடுதலை செய்யக்கோரி பல்வேறு பிரபலங்களும் சமூக வலைதளங்களில் குரல் கொடுத்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து #ReleasePerarivalan என்ற ஹாஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட ஏழு பேர், சுமார் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
இவர்களை விடுதலை செய்யக்கோரி பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் குரல் கொடுத்து வருகின்றன. குறிப்பாக பேரறிவாளனை விடுவிக்க வலியுறுத்தி, அவரது தாய் அற்புதம் அம்மாள் நீண்ட போராட்டத்தை நடத்தி வருகிறார்.
பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநர் முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் இதன் மீது இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு அளித்த பரிந்துரை மீது முடிவெடுக்காமல் ஆளுநர் தாமதம் செய்வது தொடர்பான கருத்துகளை தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் வெளிப்படையாக பதிவு செய்துள்ளன.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றமும் தனது அதிருப்தியை தெரிவித்து இருந்தது. பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் வழங்க வேண்டுமெனக் கோரி அவரது தாய் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நடந்தபோது, “தமிழக அரசின் தீர்மானத்தை ஆளுநர் ஏற்கலாம். அல்லது மறுக்கலாம்; ஆனால், முடிவெடுக்காமல் இருப்பது ஏன்” எனக் கேள்வியெழுப்பியது.
இந்நிலையில், தற்போது நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து பேரறிவாளனை ஆளுநர் விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக நடிகர் விஜய் சேதுபதி ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பேரளிவாளனின் தாய் அற்புதம்மாளின் 29 ஆண்டுகால போராட்டம் குறித்தும் அவர் காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக நடிகர் பிரகாஷ் ராஜ் பதிவிட்டுள்ள ட்வீட்டில், 1,000 குற்றவாளிகள் தப்பிக்கலாம், ஆனால், ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்று கூறியுள்ளார்.
நீதி, நியாயம், சட்டம், தர்மம் அத்தனையையும் தாண்டி கால் நூற்றாண்டு கடந்தும் கண்ணீரோடு போராடும் ஒரு தாயின் தவிப்பைப் பாருங்கள்… சிறை தண்டனையில் அல்லாடுவது பேரறிவாளன் மட்டும் அல்ல, தாய் அற்புதம் அம்மாளும்தான் என நடிகர் ஆர்யா ட்வீட் செய்துள்ளார்.
சட்டம் தன் வாசலைத் திறந்த பின்னும் அரசியல் காரணங்களால் விடுதலையை மறுப்பது அநீதி என இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
“குற்றமே செய்யாத ஒருவருக்கு 30 ஆண்டுகால சிறை. தாய் தனது மகனை மீட்க 30 ஆண்டுகளாக போராடுகிறார். அவர்களுக்கு உரிய நீதியை வழங்குமாறு தமிழக முதல்வர் மற்றம் ஆளுநரை கேட்டுக் கொள்கிறோம். இனியாவது தாயும் மகனும் சுதந்திரமாக வாழட்டும்” என இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பதிவிட்டுள்ளார்.
“பேரறிவாளன் குற்றமற்றவர் என விசாரணை அதிகாரி கூறிவிட்டார்; விடுதலைக்கு தடையில்லை என உச்சநீதிமன்றமும் கூறிவிட்டது. அமைச்சரவையும் பரிந்துரைத்து விட்டது. ஆனாலும் பேரறிவாளனை விடுதலை செய்ய மறுப்பது அநீதி. உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.