NewsPoliticsWorld

அதிமுக – பாஜக கூட்டணி: அமித் ஷா அழுத்தம் கொடுத்தாரா? அவசரப்பட்டுவிட்டதா அதிமுக? – தமிழக அரசியல்

  • ப்ரியன்
  • மூத்த பத்திரிகையாளர்
அதிமுக - பாஜக கூட்டணி

(இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துகள் அல்ல. – ஆசிரியர்)

பெரும் பரபரப்புடன் பேசப்பட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சென்னை வருகை தமிழக அரசியல் தளத்திலும் ஆளும் கட்சியின் இரட்டைத் தலைமையிடையே நிலவும் கருத்து வேறுபாடுகள் குறித்தும் பலவித கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

அவரது வருகைக்கு முன்னர் தமிழக பா.ஜ.க. தலைவர் முருகன் “அமித்ஷா சென்னைக்கு வருவது எதிர் கட்சிகளுக்கு பயத்தை உண்டாக்கி இருக்கிறது” என்றார்.

ஆனால், இப்போது அ.இ.அ.தி.மு.கவினரிடையே ஒருவித பதற்றம் உருவாகியிருப்பதை உணர முடிகிறது. அதேபோல “அமித் ஷா ரஜினியைச் சந்திப்பார்” என்றும் கிளப்பப்பட்ட பரபரப்பு புஸ்வாணமாகியிருக்கிறது.

இது ரஜனி – பா.ஜ.க. இடையிலான நட்பு அல்லது நெருக்கம் குறித்த சந்தேகங்களை எழுப்புகிறது. “மு.க. அழகிரி அமித் ஷாவைச் சந்திப்பார்; அதன் மூலம் தி.மு.கவிற்கு அதிர்ச்சி அளிக்கப்படும்” என்று சில பா.ஜ.க. பிரமுகர்கள் பத்திரிகையாளர்களிடையே தகவல்களைப் பரப்பி வந்தனர். இந்த சந்திப்பும் நடைபெறாத நிலையில் ‘பா.ஜ.கவுடன் எந்தவித நெருக்கத்தையோ, தொடர்பையோ ஏற்படுத்திக்கொள்ள அழகிரி விரும்பவில்லையோ ‘ என்ற பார்வையும் முன்வைக்கப்படுகிறது.

அதே சமயம், அமித் ஷாவுக்கு கொடுக்கப்பட்ட எழுச்சி மிகு வரவேற்பு தமிழக மக்களுக்கு பா.ஜ.கவின் வளர்ச்சியைப் பற்றிய ஆக்கபூர்வமான பார்வையையும் கொடுத்திருக்கும் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

அமித் ஷாவின் சென்னை பயணத்தின்போது “அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணி இறுதியாக்கப்படும்” என்ற எதிர்பார்ப்பு நிறைவேறியிருக்கிறது. ஆனால் அது செயல்படுத்தப்பட்டவிதம் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே ஆளும் கட்சி நிர்வாகிகளில் ஒரு சாரார் மத்தியில் “பா.ஜ.கவுடன் கூட்டணி வேண்டாம்” என்ற எண்ணம் சற்று பலமாகவே இருக்கிறது.

amit shah

எனவே எல்லோரையும் சமாதானப்படுத்தி கூட்டணியை கட்டமைக்க வேண்டும் என்ற நோக்கில் “தேர்தல் நெருக்கத்தில் கூட்டணி குறித்த முடிவெடுக்கப்படும் எனச் சொல்லி வந்தார் இபிஎஸ். கட்சியின் அமைப்புகளின் ஒப்புதலுடன் அறிவிப்பதே அதிருப்தியைத் தவிர்க்கும் என்பது அவரது கருத்தாக இருந்து வந்தது.

ஆனால், அரசு விழாவில் “பா.ஜ.கவுடன் கூட்டணி தொடரும்” என்று ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் திடீரென அறிவித்தது, அரங்கத்திலிருந்த அமைச்சர்களிடையேகூட அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டது. வேறு வழியில்லாமல் பின்னால் பேசிய முதல்வரும் ஓபிஎஸ் கருத்தை வழிமொழிய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார்.

முதல் நாள் நடந்த நிர்வாகிகள் கூட்டத்திலும் இது குறித்த பேசப்படவில்லை என்கிறார்கள். “கட்சியிலும் ஆட்சியிலும் தம்முடைய செல்வாக்கை பலப்படுத்திக்கொண்டார் இபிஎஸ் ” என்று பொது வெளியில் இருந்த பார்வையை உடைக்கும் விதமாக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தனது அதிகாரத்தை பயன்படுத்திக் கொண்டாரா அல்லது பா.ஜ.கவுக்கு தான் நெருக்கமானவர் என்ற தோற்றத்தை உறுதிப்படுத்திக்கொள்ள முந்திக்கொண்டாரா என்ற கருத்தோட்டமும் அ.தி.மு.கவில் நிலவுகிறது.

அதிமுக - பாஜக கூட்டணி

இரண்டு கட்சிகள் கூட்டணி அமைக்கும்போது இரு கட்சிகளின் தலைமையும் கூட்டாக அறிவிப்பது வழக்கமான நடைமுறை. ஆனால் முதல்வரும் துணை முதல்வரும் கூட்டணியை உறுதிப்படுத்தியபோது அதை எதிரொலிக்காமல் அமித் ஷா கடந்துபோனது அ.தி.மு.கவினரை உறுத்திக்கொண்டிருக்கிறது. “ஒன்றரை கோடி தொண்டர்களைக் கொண்ட இந்தக் கட்சிக்கு உரிய கௌரவத்தை செய்திருக்கிறாரா ஓபிஎஸ்”? என்ற கேள்வி கட்சியினரை குடைந்து கொண்டிருக்கிறது.

அமித் ஷாவை அவர் தங்கியிருந்த இடத்தில் சந்தித்த பின்னர் பா.ஜ.க. தமிழக பொறுப்பாளருடன் சேர்ந்து கூட்டணி பற்றி அறிவித்திருக்கலாம் என நிர்வாகிகள் கருதுகிறார்கள். மேலும், தொகுதி பங்கீடு போன்ற விவகாரங்கள் வரும்போது ஓபிஎஸ்சின் செயல்பாடுகள் கட்சி நலனை ஒட்டியிருக்குமா என்கிற சந்தேகமும் எழந்திருக்கிறது.

“நாங்கள் பா.ஜ.கவுக்கு அடங்கி நடக்கிறோம்” என்ற பார்வை பொதுவெளியில் இருக்கையில் ஓபிஎஸ்சின் செயல்பாடுகள் அதை உறுதிபடுத்தும் வகையில் இருந்தால், எங்கள் ஓட்டு வங்கியில் மேலும் ஓட்டை விழும்” என்கிறார்கள் அவர்கள்.

அதே சமயம், வேறு விதமான கருத்தையும் முன் வைக்கிறார்கள் சிலர். “எங்களுக்கும் பா.ஜ.கவுக்கும் இடையே கூட்டணி குறித்து இரு தரப்பிலுமிருந்து வந்த முரண்பட்ட கருத்துக்களால் தினசரி எதாவது சர்ச்சை ஏற்பட்டு வந்தது. அதில் ஒரு தெளிவு ஏற்படுத்தும் வகையில் இந்த அறிவிப்பு இருப்பது ஆறுதல். தேர்தலை நோக்கி செல்லும் நிலையில் இணைந்து செயல்பட இது வசதியாக இருக்கும். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் பா.ம.க. எங்களை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், அந்தத் தேர்தலில் தோழமைக் குறைவு காரணமாக தோல்வியடைந்ததை நினைவில் கொள்ள வேண்டும். இருந்தாலும் உரிய இடத்தில் உரிய முறையில் பா.ஜ.கவுடன் கூட்டணியை அறிவித்ததிருந்தால் கண்ணியமும் கௌரவமும் கூடியிருக்கும்” எனபது சில நிர்வாகிகளின் கருத்தாக இருக்கிறது.

இந்த சூழலில் “தினகரனையும் இணைத்து கட்சியை பலப்படுத்தி தேர்தலை சந்தியுங்கள்” என்று அமித் ஷா ஆலோசனை (?) சொன்னதாக செய்திகள் வருகின்றன. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இது குறித்து முதல்வர் – துணை முதல்வர் நிலைப்பாடு பற்றிய கேள்வி எழுகிறது.

இந்த விவகாரம் மட்டுமல்லாமல் கூட்டணி கட்சிகளுடன் – குறிப்பாக பா.ஜ.கவுடன் – தொகுதி ஒதுக்கீடு, தொகுதிகளை அடையாளம் காணுதல், பிரசாரத்தை முறைப்படுத்தல் போன்ற விஷயங்களில் ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும் ஒருமித்த கருத்துடன் செயல்படவேண்டுமே என்ற கவலையும் கட்சிக்காரர்களுக்கு இருக்கிறது.

மத்தியில் ஆட்சியில் இருப்பது மட்டுமல்லாமல் தமிழகத்தில் தனது இந்துத்வா வாக்கு வங்கியை விஸ்தரிக்கும் தீவிர முயற்சியில் இருக்கும் பா.ஜ.கவோடு கூட்டணி அமைப்பது பல வகையிலும் சாதகமாக இருக்கும் என்று கொண்டாடும் அதிமுகவினரும் இருக்கிறார்கள்.

அ.தி.மு.க. – பா.ஜ.க. விவகாரம் ஒரு பக்கம் இருக்க ரஜினிகாந்தை அமித் ஷா சந்திக்காததும் பேசு பொருளாகியிருக்கிறது. “அமித் ஷா சந்திக்க விரும்புகிறார்” என்று சில நாட்களுக்கு முன்னர் எஸ். குருமூர்த்தி சொன்னபோது “அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால் நான் கட்சி ஆரம்பிக்கும் சூழலில் அவரைச் சந்தித்தால் அது தவறான குறியீட்டை மக்களுக்கு காட்டும்” என்று நளினமாக மறுத்து விட்டாராம் ரஜினி.

admk bjp amit shah tamil nadu politics

அதே போல் குடும்ப பிரச்னையில் தீர்வை எதிர்பார்த்து காத்திருக்கும் அழகிரி எந்த ஓர் அரசியல் முடிவையும் எடுப்பதை தள்ளிப்போட்டிருக்கிறாராம்.

“தி.மு.கவை ஆட்சிக்கு வரவிடக்கூடாது” என்ற தனது ஒற்றை இலக்கில் பல யுக்திகளுடன் களத்தை அணுகுகிறது பா.ஜ.க. பலமான அ.தி.மு.க. வாக்கு வங்கி மற்றும் தனது வளரும் இந்துத்வா வாக்கு வங்கிகள் மூலம் கணிசமான இடங்களை பிடிக்க முடியும் என்று நம்புகிறது பா.ஜ.க. ரஜினி தனியாக களம் காணும் பட்சத்தில், தி.மு.கவுக்கு போக வேண்டிய சிறுபாண்மை வாக்கு வங்கியிலும் அவர் ஓட்டைபோடுவார் என்பது பா.ஜ.கவின் எதிர்பார்ப்பு. அதிகாரம் கைவசம் இருக்கும் நிலையில் தேர்தலுக்கு பிறகு ஏற்படும் எந்த சூழலையும் சாதகமாக மாற்றிக்கொள்ளும் வல்லமை பா.ஜ.கவுக்கு கூடுதல் பலம்.

அ.தி.மு.க. “கூட்டணி ஆட்சிக்கு இடமில்லை” என்ற நிலைப்பாட்டில் இருக்கும்போது வானதி சீனிவாசன் “கூட்டணி ஆட்சியே அமையும்” என்று அமித் ஷா வருகைக்கு பின்பும் சொல்வதன் பின்னணி இதுதான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button