
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் பெருந்திருவிழா இன்று(27) மாலை கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது.
திருவிழாவை முன்னிட்டு ஆலயமும் அதன் சுற்றுப்புறச் சூழலும் முழுமையாகத் தயார்படுத்தப்பட்டுள்ளன.

இந்தப் பெருந் திருவிழா ஏற்பாட்டுப் பணிகளுக்காகப் பங்குத்தந்தையர்கள், கடற்படையினர், பிரதேச செயலக மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் என 500 இற்கும் மேற்பட்டோர் கச்சதீவில் தங்கியிருந்து பணியாற்றி வருகின்றனர்.
பக்தர்களின் வருகைக்காகப் போக்குவரத்து, குடிதண்ணீர் மற்றும் சுகாதார வசதிகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
இன்று மாலை(27) கொடியேற்றத்தோடு திருவிழா ஆரம்பமாகவுள்ளது.
கச்சதீவுக்கான படகுச்சேவையானது குறிகட்டுவான் இறங்குதுறையில் இருந்து இன்று காலை 5.00 மணி முதல் பி.ப 02.00 மணி வரை சேவையில் ஈடுபடுத்தப்படும்.
இந்நிலையில் இன்று பிற்பகல் பி.ப 2.00 மணிக்கு பின்னர் கச்சதீவிற்கான கடற்போக்குவரத்து சேவை இடம்பெறமாட்டாது என்பதனால் யாத்திரிகர்கள் குறித்த நேரத்திற்கு முன்னர் தமது பயணத்தினை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
குறிகட்டுவானில் இருந்து பயணிக்கும் ஒரு நபருக்கான படகிற்குரிய ஒரு வழிப் பயணக் கட்டணம் ரூ.1200 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தற்போது குறிகட்டுவான் இறங்குதுறையில் மக்கள் குவிந்தவண்ணம் காணப்படுகின்றனர்.



