இலங்கை
Trending

தேர்தல் செலவுக்காக மொசாட்டிடம் நிதி கோரிய ஜே.ஆர்: அதிர வைக்கும் இரகசிய ஆவணங்கள் அம்பலம்!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன, தனது தேர்தல் பிரசாரச் செலவுகளுக்காக இஸ்ரேலின் உளவுப்பிரிவான ‘மொசாட்’ அமைப்பிடம் ஒரு மில்லியன் டொலர் நிதியுதவி கோரியிருந்ததாக ‘தி வயர்’ (The Wire) செய்தித்தளம் வெளியிட்டுள்ள, உத்தியோகபூர்வ ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

1987ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மொசாட் அமைப்பிடம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் எதிர்க்கட்சி சிலவேளைகளில் ஆட்சிக்கு வந்தால், இஸ்ரேலியர்கள் நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்பதைச் சுட்டிக்காட்டியே, ஜே.ஆர். ஜயவர்தன இந்த நிதி உதவியைக் கோரியதாக இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சின் ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.

இதனைத் தொடர்ந்து, 1988 ஆம் ஆண்டு ஜனவரியில் இஸ்ரேலுக்கு அனுப்பிய கடிதத்தில், பாதுகாப்பு மற்றும் உளவுத்துறைக்கு வழங்கிய உதவிகளுக்காக ஜே.ஆர். தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.

அக்காலப்பகுதியில் இலங்கையில் நிலவிய தமிழர் ஆயுதப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக இஸ்ரேல் பாரிய இராணுவ உதவிகளை வழங்கியுள்ளது.

குறிப்பாக, இலங்கை இராணுவத்திற்குப் பயிற்சி வழங்கிய இஸ்ரேலியப் பயிற்றுவிப்பாளர்கள், வெளியில் தங்களை ‘விவசாய ஆலோசகர்கள்’ என்றே அடையாளப்படுத்திக் கொண்டுள்ளனர்.

1987 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தை மீட்கும் தாக்குதல்களுக்கு இவர்களே பயிற்சியளித்ததுடன், ஜனாதிபதியின் தனிப்பட்ட பாதுகாப்புப் பிரிவினருக்கு இஸ்ரேலியப் பிரதமரின் பாதுகாப்புப் படையினரே பயிற்சியளித்துள்ளமையும் தற்போது அம்பலமாகியுள்ளது.

1988ஆம் ஆண்டளவில் இஸ்ரேல் இலங்கைக்கு சுமார் 30 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவத் தளவாடங்களை விற்பனை செய்துள்ளது.

இதில் 10 மில்லியன் டொலர் பெறுமதியான ‘டோரா’ ரக அதிவேகப் படகுகள் மற்றும் மினி-உஸி (Mini-Uzi) ரகத் துப்பாக்கிகள் முக்கியமானவை.

“இலங்கை அரசு இராணுவ ரீதியாக இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முயல்வது ஒரு பகற்கனவு” என்று அமெரிக்கா எச்சரித்த போதிலும், இஸ்ரேல் தனது மூலோபாய நலன்களுக்காகத் தொடர்ந்து இராணுவ உதவிகளை வழங்கியுள்ளது.

இலங்கையில் தமிழ் இளைஞர்கள் காணாமல் ஆக்கப்படுதல், பொது மக்கள் மீது நடத்தப்பட்ட குண்டுவீச்சுகள் மற்றும் சித்திரவதைகள் குறித்து இஸ்ரேலிய இராஜதந்திரிகள் நன்கு அறிந்திருந்தனர் என்பதை இந்த ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன.

இருந்தபோதிலும், தனது இராஜதந்திர நலன்களுக்காக இஸ்ரேல் இலங்கையுடன் இரகசிய உறவைத் தொடர்ந்து பேணியதாக அந்தச் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button