
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் விரிவுரைகளை பகிஷ்கரித்து பல்கலைக்கழக முன்றலில் இன்று(19) போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இலங்கையின் சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தேசிய கொடியை இறக்கப்பட்டு கறுப்புக் கொடியேற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக மாணவர்களிடம் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


கறுப்பு கொடியேற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோரிடம் சுமார் மூன்று மணி நேர விசாரணைகளை மேற்கொண்டு வாக்கு மூலம் பதிவு செய்தனர்.
அந்த நிலையில், பல்கலைக்கழக வளாகத்தினுள் பொலிஸார் வாகனத்தில் நுழைந்து துணைவேந்தர், பதிவாளர் ஆகியோரிடம் மூன்று மணி நேர விசாரணைகள் முன்னெடுத்தமைக்கு மாணவர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.
அதன்பின்னர், பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் மூவரை கடந்த 17ஆம் திகதி விசாரணைக்கு வருமாறு பதிவாளர் ஊடாக மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் அழைப்பாணை அனுப்பியிருந்தனர்.


அந்த நிலையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பணிப்புக்கு அமைய, பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
இவ்வாறிருக்கையில், பிறிதொரு தரப்பினரான பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ள அழைப்பது மாணவர்களை அச்சுறுத்தும் செயற்பாடாகும் என தெரிவித்து மாணவர்கள் இன்று விரிவுரைகளை பகிஷ்கரித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.



