இலங்கை
Trending

மருத்துவ பீடத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட மாணவனின் மனுவிற்கு உயர் நீதிமன்றின் தீர்ப்பு!

அனைத்துத் தகுதிகளையும் கொண்டிருந்த போதிலும், அரச பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு அனுமதிக்கப்படாமல் நிராகரிக்கப்பட்ட இலங்கை மாணவர் ஒருவரை உடனடியாகப் பல்கலைக்கழகத்தில் சேர்த்துக்கொள்ளுமாறு உத்தரவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு (UGC) உயர்நீதிமன்றம் நேற்று (05) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கொழும்பு, பொரளைப் பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரித்த பின்னரே நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த மாணவர் இலங்கையின் க.பொ.த (சாதாரண தர) பரீட்சையில் சித்தியடைந்த பின்னர், அவரது தந்தை வெளிநாட்டிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் பணிபுரிந்த காரணத்தால் ரஷ்யாவிற்குச் சென்றுள்ளார்.

அங்கு அவர் இலங்கை உயர்தரப் பரீட்சைக்கு நிகரான “Senior School Certificate Examination” எனும் பரீட்சையில் சித்தியடைந்த்தோடு, மருத்துவ பீடத்திற்குத் தேவையான அனைத்துத் தகுதிகளையும் பெற்றிருந்தார்.

இருப்பினும், பல்கலைக்கழக நுழைவிற்கான தகுதிகளை அவர் பூர்த்தி செய்யவில்லை எனக் கூறி அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இது தனது அடிப்படை உரிமையை மீறும் செயல் என அந்த மாணவர் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதியரசர் அர்ஜுன ஒபேசேகர தலைமையிலான, ஜனக் டி சில்வா மற்றும் சோபித ராஜகருணா ஆகிய நீதியரசர்கள் அடங்கிய அமர்வு, மாணவர் தரப்பு நியாயங்களை ஏற்றுக்கொண்டது.

குறித்த மாணவர் பல்கலைக்கழக அனுமதிக்குத் தேவையான அனைத்துத் தகுதிகளையும் கொண்டுள்ளாரென்றும், அவரை நிராகரித்தது சட்டவிரோதமானது என்றும் நீதியரசர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்தோடு, பல்கலைக்கழக அனுமதிகள் தொடர்பாக தீர்மானம் எடுக்கும் அதிகாரம் வெளிவிவகார அமைச்சுக்கு இல்லை என்பதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனடிப்படையில், குறித்த மாணவரை உடனடியாக ஓர் அரச பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கு அனுமதிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button