
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் பெரும் தாக்கத்தைச் செலுத்தும் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது மற்றும் பிராந்தியப் போர்ச் சூழலைக் கட்டுப்படுத்துவது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் தீவிர இராஜதந்திர முயற்சிகளில் இறங்கியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸ் (Kaja Kallas), ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சியுடன் (Abbas Araghchi) நேற்று(22) அவசரத் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டார்.
இதன்போது, மூடப்பட்டுள்ள ஹோர்முஸ் நீரிணையை உடனடியாகத் திறக்க வேண்டியதன் அவசியம் குறித்து அவர் வலியுறுத்தினார்.
இந்த நெருக்கடிக்கு இராஜதந்திர ரீதியில் தீர்வுகாணும் நோக்கில் துருக்கி, கட்டார் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுடனும் அவர் விரிவான ஆலோசனைகளை நடத்தியுள்ளார்.
போர்ச் சூழல் காரணமாக எரிசக்தி உட்கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் மற்றும் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டிருப்பதால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிசக்தி அழுத்தம் குறித்து ஆராயப்பட்டது.
பொதுமக்களின் உட்கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் புதிய தாக்குதல் அச்சுறுத்தல்கள், மத்திய கிழக்கு மற்றும் உலகெங்கிலுமுள்ள மில்லியன் கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கும் என ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.



