
பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மன்னார் மாவட்டத்துக்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் நேற்று(02) நேரடியாகச் சென்று பார்வையிட்டார்.
பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய அவர், சேதமடைந்த பகுதிகளையும் நேரடியாகப் பார்வையிட்டார்.
மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்குத் தேவையான நிதியொதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளதால், மாகாண நிர்வாகத்தினர் எவ்வித தாமதமுமின்றி நிவாரண மற்றும் புனரமைப்புப் பணிகளை முன்னெடுக்குமாறு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.


மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கூராய், ஆத்திமோட்டை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள கள்ளியடி அ.த.க. பாடசாலைக்கும் முதலில் பயணம் செய்தார்.
வெள்ளத்தின்போது வீட்டின் கூரைகள் மற்றும் மரங்களில் தங்கியிருந்து பாதுகாப்புத் தரப்பினரால் மீட்கப்பட்ட மக்களுடன் ஆளுநர் கலந்துரையாடினார்.
இதன்போது, கூராய் குளத்துக்கான நீர்ப்பாசன வாய்க்கால் திட்டத்திலுள்ள குறைபாடுகளே இந்த இடருக்குக் காரணம் என மக்கள் குற்றஞ்சாட்டினர்.
எதிர்காலத்தில் இவ்வாறான நிலை ஏற்படாதவாறு உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதியளித்தார்.


மேலும், வெள்ளத்தில் தமது காணி ஆவணங்கள் அனைத்தும் அழிவடைந்துள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டனர்.
இதற்குப் பதிலளித்த ஆளுநர், அலுவலகப் பிரதிகளைக் கொண்டு எதிர்காலத்தில் மூல ஆவணங்களை மீள வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.



