
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை ஒரு சதவீதத்திற்கும் மேலாக வீழ்ச்சியடைந்துள்ளது.
ஈரானுக்கு எதிராகத் திட்டமிடப்பட்டிருந்த தாக்குதலைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும், மத்திய கிழக்கில் போரை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க விரும்புவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி அறிவித்ததைத் தொடர்ந்தே இந்த வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அதற்கமைய, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்று 110 டொலரைவிட குறைவடைந்துள்ளது.
அதேபோல், அமெரிக்க மசகு எண்ணெய் விலை பீப்பாய் ஒன்று 103 டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் போக்குவரத்துத் தடை நீண்டகாலத்திற்கு நீடிக்குமோ என்ற அச்சத்தில் வர்த்தகர்கள் வொஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.
உலகளாவிய எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயு விநியோகத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு (20%) இந்தப் பாதையின் ஊடாகவே தினமும் இடம்பெறுகிறது.
சர்வதேச அளவில் எரிசக்தி விநியோகத்தில் இந்தப் பாதை வகிக்கும் முக்கிய பங்கு காரணமாக,
இந்த பேச்சுவார்த்தைகளின் முடிவுகள் உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.



