
அமெரிக்காவில் நடைபெற்றுவரும் மியாமி ஓபன் (Miami Open) சர்வதேச டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ‘கார்லோஸ் அல்காரஸ்’ அதிர்ச்சித் தோல்வியடைந்துள்ளார்.
மூன்றாவது சுற்றுப் போட்டியில், அமெரிக்க வீரர் ‘செபாஸ்டியன் கோர்டா’ வை எதிர்கொண்டார்.

ஆரம்பம் முதலே தாக்குதல்மிக்க ஆட்டத்தை வெளிப்படுத்திய கோர்டா, முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார்.
இரண்டாவது செட்டில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்திய அல்காரஸ், கடும் போராட்டத்துக்குப் பிறகு 7-5 என்ற கணக்கில் செட்டை கைப்பற்றி போட்டியை சமநிலைப்படுத்தினார்.

எனினும் வெற்றியைத் தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில் கோர்டா மீண்டும் ஆட்டத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
இதன் மூலம், அல்காரஸ் 3-6, 7-5, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறினார்.
இந்த வெற்றி கோர்டாவுக்கு முக்கிய முன்னேற்றமாக அமைந்ததுடன், அவர் அடுத்த சுற்றுக்கும் தகுதி பெற்றுள்ளார்.

குறிப்பாக, இந்த ஆண்டில் அல்காரஸ் தொடர்ச்சியாக 15 போட்டிகளில் வெற்றி பெற்று சிறப்பான சாதனையைப் பதிவு செய்திருந்தார்.
அந்த வெற்றித் தொடரை இந்த போட்டியில் கோர்டா முறியடித்துள்ளார்.
மேலும், 2026ஆம் ஆண்டில் அல்காரஸ் சந்திக்கும் இரண்டாவது தோல்வியாக இது அமைகிறது.



