உலகம்
Trending

லெபனான் மீது தாக்குதல் தொடர்ந்தால் போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து: ஈரான் கடும் எச்சரிக்கை!

லெபனான் மீது இஸ்ரேல் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்கள் நிறுத்தப்படாவிட்டால், அமெரிக்காவுடன் எட்டப்பட்ட இரண்டு வார கால தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து ஈரான் வெளியேறும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையில் நேற்று (08) அதிகாலை முதல் போர் நிறுத்தம் அமுலுக்கு வந்திருந்தது.

இருப்பினும், லெபனானிலுள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் இலக்குகள் மீது இஸ்ரேல் தொடர்ந்து வான்வழித் தாக்குதல் மேற்கொண்டுவருகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவுடன் செய்துகொள்ளப்பட்ட தற்காலிக ஒப்பந்தம் அர்த்தமற்றது என ஈரான் கருதுகிறது.

ஈரானின் அதிகாரப்பூர்வ ‘பார்ஸ்’ மற்றும் ‘தஸ்னிம்’ செய்திச் சேவைகள், இஸ்ரேலின் “ஒப்பந்த மீறல்கள்” குறித்து பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர்மட்ட ஆதாரங்களை மேற்கோள் காட்டி இத்தகவலை வெளியிட்டுள்ளன.

Ads: 🌟 STAY IN STM COMFORT – BOOK NOW!

இந்நிலையில், அமெரிக்காவுடனான ஈரானின் போர் நிறுத்தம் தங்களுக்குப் பொருந்தாது என்றும், லெபனானில் உள்ள பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு எதிராகத் தங்கள் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் எனவும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

லெபனானின் பெய்ரூட் மற்றும் தெற்குப் பகுதிகளில் இஸ்ரேல் நேற்று நடத்திய பாரிய தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாகவே, ஈரான் தனது போர் நிறுத்த முடிவை மறுபரிசீலனை செய்யத் தொடங்கியுள்ளது.

ஈரான் இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறினால், ஏற்கனவே மூடப்பட்ட ஹோர்முஸ் நீரிணை மீண்டும் முழுமையாக முடக்கப்படலாம்.

இது சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விநியோகத்தைப் பாதிப்பதோடு, உலகளாவிய எரிபொருள் விலையேற்றத்திற்கும் வழிவகுக்கும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இதேவேளை, லெபனானில் அதிகரித்து வரும் போர்ப் பதற்றம் குறித்து கவலை தெரிவித்துள்ள சீனா, அங்கிருந்து இஸ்ரேல் உடனடியாக தனது படைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் அவசரக் கூட்டத்தில் உரையாற்றிய சீனப் பிரதிநிதி, “லெபனான் மற்றொரு காசாவாக மாற அனுமதிக்கக் கூடாது” என எச்சரித்துள்ளார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button