
இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை 90 ஆயிரத்து 306 டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
பதிவான மொத்த நோய்த்தொற்றுகளில் 52.96 சதவீதம் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, டெங்கு நோயால் இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த ஆண்டில் ஒரே மாதத்தில் அதிகளவான டெங்கு நோய்த் தொற்றுகள் ஜூலை மாதத்தில் பதிவாகியுள்ளன.
ஜூலை மாதத்தில் மாத்திரம் 29 ஆயிரத்து 973 பேருக்கு டெங்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், ஓகஸ்ட் மாதத்திலும் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதுடன், மாதத்தின் முதல் சில நாட்களில் 4 ஆயிரத்து 959 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன.
நாடு முழுவதுமுள்ள 119 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள், டெங்கு பாதிப்புக்கான அதிக ஆபத்துள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
மழைக்காலச் சூழல் தொடர்வதால், பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட்டு, டெங்கு பரவக்கூடிய இடங்களைத் தூய்மையாக வைத்திருக்குமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது.




