
கடல்மட்ட உயர்வு காரணமாக இந்தியாவின் முக்கிய கடலோர நகரங்களான மும்பை மற்றும் கொல்கத்தாவில் வாழும் கோடிக்கணக்கான மக்கள் எதிர்காலத்தில் வெள்ள அபாயத்தை எதிர்கொள்ள நேரிடும் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், இந்தியாவின் கடலோர நகரங்கள் காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
அதன்படி, 2050ஆம் ஆண்டுக்குள் கடல்மட்டம் 30 முதல் 40 சென்ரி மீற்றர் வரை உயர்ந்தால், மும்பை மற்றும் கொல்கத்தா நகரங்களில் சுமார் 2 கோடி மக்கள் வெள்ள அபாயத்தை எதிர்கொள்ளக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
கடல்மட்ட உயர்வோடு புயல் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்தங்கள் இணையும் போது, நகர்ப்புற மக்களின் வாழ்வாதாரம் மற்றும் உட்கட்டமைப்புகளில் குறிப்பிடத்தக்க பாதிப்புகள் ஏற்படக்கூடும் என ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) எச்சரித்துள்ளது.
மும்பை இந்தியாவின் முக்கிய நிதி மையமாக இருப்பதால், கடல்மட்ட உயர்வால் ஏற்படும் பாதிப்புகள் நாட்டின் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, கங்கை டெல்டா பகுதியில் அமைந்துள்ள கொல்கத்தா நகரமும் வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட காலநிலை சார்ந்த பேரிடர்களால் அதிகளவில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அபாயங்களை எதிர்கொள்வதற்காக கடலோரப் பாதுகாப்பு கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், பசுமைப் பகுதிகளை அதிகரித்தல், நகரத் திட்டமிடலில் மாற்றங்களை மேற்கொள்ளுதல் மற்றும் கார்பன் உமிழ்வைக் குறைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் அவசியம் என நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.




