
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடு தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் சந்தேகநபராக பெயரிடப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 23ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (16) உத்தரவிட்டார்.
சந்தேகநபருக்கு பிணை வழங்குவது தொடர்பான உத்தரவு அன்றைய தினம் வழங்கப்படும் என்றும் நீதவான் அறிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த பின்னரே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
நீதிமன்றில் விடயங்களை சமர்ப்பித்த பிரதி மன்றாடியார் நாயகம் ஜனக பண்டார, இந்த சம்பவம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நான்காவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனைகள் கிடைக்கப்பெற்றுள்ளதால், இது தொடர்பான குற்றச்சாட்டுகளை தாமதமின்றி தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், இந்த விசாரணை நடவடிக்கைகளுக்காக எயர் பஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் பல தடவைகள் இலங்கைக்கு வருகை தந்து வாக்குமூலங்களை வழங்கியுள்ளதாகவும் பிரதி மன்றாடியார் நாயகம் மேலும் சுட்டிக்காட்டினார்.




