தியாகி திலீபன் நினைவு விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் – யாழ். மாநகர சபை உறுப்பினர் கபிலன் வேண்டுகோள்!

தியாகி திலீபனின் நினைவேந்தல் மற்றும் அவரது சிலை அமைப்பது தொடர்பான விடயங்களை அரசியலாக்காமல், அனைத்து தரப்பினரும் ஒன்றுபட்டு பொறுப்புடன் செயற்பட்ட வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் சுந்தரமூர்த்தி கபிலன் வேண்டுகோள் விடுத்தார்.
யாழ்ப்பாண மாநகர சபையின் இன்றைய அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.


திலீபனின் நினைவேந்தல் தொடர்பான விடயங்களில் தமது கட்சி எந்தவித எதிர்ப்பு நிலைப்பாட்டையும் எடுத்திருக்கவில்லை எனவும், மாறாக தியாகத்தின் மீதான மரியாதையின் அடிப்படையில் தமது கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் மலரஞ்சலி செலுத்தியதாகவும் அவர் கூறினார்.
திலீபனின் படம் மாநகர சபை வளாக நிகழ்ச்சி நிரலில் இடம்பெறாத சந்தர்ப்பத்திலும், வைக்கப்பட்ட படத்திற்கு தமது கட்சியைச் சேர்ந்த 10 உறுப்பினர்கள் அதற்கு மலரஞ்சலி செலுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
திலீபனின் சிலையை அமைப்பது தொடர்பான பிரேரணை சபைக்கு கொண்டுவரப்பட்டபோது தமது தரப்பு அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
எனினும், மாநகர சபையின் நடைமுறைகள் மற்றும் சட்ட விதிமுறைகளுக்கு அமைவாகவே எந்தவொரு பிரேரணையும் முன்வைக்கப்பட வேண்டும்.
இவ்வாறான உணர்வுபூர்வமான விடயம் தொடர்பான பிரேரணை விசேட கவனத்துடனும் உரிய நடைமுறைகளைப் பின்பற்றியும் முன்வைக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், சிலை அமைப்பது தொடர்பான நடவடிக்கையின் ஆரம்ப கட்டத்தில் அது தற்காலிகமாக அமைக்கப்படுவது என்றே கலந்துரையாடப்பட்டது. அதுவே தீர்மானமாகவும் எடுக்கப்பட்டது.
இதற்காக சில அரசியல் கட்சிகளுக்கிடையே பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றிருந்தன. ஆனால் எமது கட்சியுடன் இது தொடர்பாக கலந்துரையாடப்படவில்லை.
இருந்தபோதிலும், இந்த விடயத்தில் தாம் மரியாதையோடு அமைதியாக இருந்தோம்.
ஆனால் அதன் பின்னர் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக தமது அரசாங்கத்தின் மீது பழிசுமத்தும் வகையில் அமைந்தமை எமக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக யாழ்.மாநகரசபை உறுப்பினர் சுந்தரமூர்த்தி கபிலன் தெரிவித்தார்.




