

குருணாகல் பகுதியில் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் தொடர்பில் கிடைத்த இரகசிய தகவலையடுத்து, கிரியுல்ல பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் இன்று, செப்டெம்பர் 22ஆம் திகதி காலை, சந்தேகத்திற்கிடமான காரொன்றை பின்தொடர்ந்துள்ளனர்.
காவல்துறையினரை தவிர்த்து, சந்தேகநபர் கட்டுப்பாடின்றி காரை செலுத்திச் சென்ற நிலையில், காரின் டயர்களை இலக்குவைத்து காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து, அருகிலுள்ள பன்னல நகரப் பகுதியில் காரை நிறுத்திய பொலிஸார் அதில் பயணித்த சந்தேகநபர் ஒருவரையும், காரின் பின்புற இருக்கையில் இருந்த இரண்டு பெண்களையும் கைது செய்துள்ளனர்.
காரை சோதனையிட்ட போது, 15 கிராம் ஹெராயின் மற்றும் 260 மில்லிகிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்ததாக சந்தேகிக்கப்படும் ரூ.924,770 ரூபா பணம் மற்றும் பொருட்களும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.




