இலங்கை
Trending

மனித உரிமை மீறல்களை மீண்டும் நிராகரித்துள்ள சவேந்திரசில்வா

இறுதிப்போரில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகத் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மீண்டும் மறுத்துள்ளார்.

இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே முன்னாள் இரணுவத் தளபதி இந்த மறுப்பைத் தெரிவித்துள்ளார்.

இலங்கைப் பாதுகாப்பு படையினர் விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தொழில்முறை ரீதியிலேயே போரிட்டனர் என்றும், இறுதி இராணுவ நடவடிக்கையின் போது பொதுமக்கள் உயிரிழப்புகளைக் குறைக்கப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டு அமெரிக்காவும், 2025 ஆம் ஆண்டில் பிரித்தானியாவும் தன் மீது விதித்துள்ள தடைகளுக்கான காரணங்களை தொடர்ந்து கேட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், தான் ஒரு போர்க் குற்றவாளி அல்ல என்றும் தாய்நாட்டுக்காகவே போரிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவத்தினர் வேண்டுமென்றே பொதுமக்களை இலக்கு வைக்கவில்லை எனக் கூறிய சவேந்திர சில்வா, போரின் போது பொதுமக்கள் உயிரிழந்திருக்கலாம் என்றும், ஆனால் அவை திட்டமிட்டுச் செய்யப்பட்டவை அல்ல என்றும் விளக்கமளித்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு போரின் இறுதிக் கட்டத்தில் தனது 58 ஆவது படைப்பிரிவு ஒரு இலட்சத்து 23 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்களை மீட்டதாகவும், சரணடைந்த சுமார் 12 ஆயிரம் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களில் 75 சதவீதத்துக்கும் அதிகமானோர் தனது படைப்பிரிவிடமே சரணடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு சரணடைந்தவர்கள் பின்னர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு சமூகத்தில் இணைக்கப்பட்டனர்.

அடுத்தடுத்து வந்த இலங்கை அரசாங்கங்கள் சர்வதேச ரீதியில் இராணுவத்தின் பக்க நியாயங்களை சரியாக முன்வைக்கத் தவறியதே தன் மீதான குற்றச்சாட்டுகள் சர்வதேச அளவில் வலுப்பெறக் காரணம் என அவர் விமர்சித்துள்ளார்.

குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்துடன் கூடிய ஆதாரங்களுடன் நேரடியாக விவாதத்துக்கு வருமாறு சர்வதேச அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்த அவர், தவறு நடந்திருந்தால் அதை ஏற்றுக்கொள்ளத் தயார் எனவும் தெரிவித்துள்ளார்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button