யாழில் 2,030 ஏக்கர் காணிகளை அவசரமாக விடுவிக்க வேண்டும்: ஜனாதிபதிக்கு டக்ளஸ் கடிதம்!


யாழ்ப்பாண மாவட்டத்தில் இராணுவத்தின் பயன்பாட்டிலுள்ள பொதுமக்கள் மற்றும் அரசாங்கத்துக்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் கட்டடங்களை விரைவாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடிதம் ஒன்றின் ஊடக அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
யுத்த காலத்தில் பாதுகாப்புத் தேவைகளுக்காக பொதுமக்களின் காணிகள் பயன்படுத்தப்பட்ட நிலையில், யுத்தம் நிறைவடைந்த பின்னரும் சில பகுதிகள் முழுமையாக விடுவிக்கப்படாமல் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக, தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில் சுமார் 2,030 ஏக்கர் காணிகள் இன்னமும் விடுவிக்கப்பட வேண்டியுள்ளது.
குறிப்பாக பலாலி வீதியின் கிழக்குப் பகுதியில் சுமார் 290 ஏக்கர் காணியும்,
பொன்னாலை–பருத்தித்துறை வீதியில் சுமார் 1,500 மீற்றர் நீளமான மூடப்பட்ட பகுதியும்,
வசாவிளான் கிழக்கில் 511 பிரிகேட் முகாம் அமைந்துள்ள பகுதியில் 45 குடும்பங்களுக்குச் சொந்தமான சுமார் 17 ஏக்கர் தனியார் காணிகள்,
மயிலிட்டித்துறை தெற்கில் சுமார் 130 ஏக்கர் பரப்பில் இதுவரை ஏறக்குறைய 5 ஏக்கர் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளன.

மயிலிட்டித்துறை வடக்கில் சுமார் 40 ஏக்கர் காணிகள்,
பலாலி வடக்கில் இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கான சுமார் 400 மீற்றர் நீளமான அணுகல் பாதை
ஆகியவை தொடர்பாக அவர் ஜனாதிபதியின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
அத்துடன், மயிலிட்டி றோமன் கத்தோலிக்க பாடசாலையின் மைதானம், மயிலிட்டி காணிக்கை மாதா ஆலயம், கிறிஸ்தவ மயானம், பிள்ளையார் ஆலயம், பொதுமக்களின் வழிபாட்டு மற்றும் சமூகப் பயன்பாட்டு இடங்கள், ஐஸ் பெக்டரி உள்ளிட்ட முக்கிய இடங்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பலாலி தெற்கு பகுதியில் அமைந்திருந்த தோலகட்டி பழச்சாறு தொழிற்சாலை மற்றும் அதனருகிலுள்ள சிறி வேலுப்பிள்ளை வித்தியாலயத்துக்குச் சொந்தமான காணிகளையும் விடுவிக்க வேண்டும் எனவும் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.
